in

புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகி போட்டி


Watch – YouTube Click

புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகி போட்டி

 

புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டு பழமையான பிரசிதிபெற்ற கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனைத் தொடர்ந்து ஊரணி பொங்கல் படைத்தல் நிகழ்ச்சியும், நேற்று இரவு கூத்தாண்டவருக்கு திருக்கல்யாணமும், பக்தர்களுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து திருநங்கைகளுக்கான அழகிகள் போட்டி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி மூன்று சுற்றாக நடைபெற்றது. முதல் சுற்று பாரம்பரிய உடைகளிலும், இரண்டாவது சுற்று மாடர்ன் உடைகளிலும், மூன்றாவது சுற்று தனித்திறமைகள் வெளிப்படுத்தும் விதமாக நடனத்துடன் நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு வண்ண ஆடைகள் அணிந்து ஒய்யாரமாக நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்த அழகிகள் போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்த திருநங்கைகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இதில் புதுச்சேரி பாகூரை சேர்ந்த சாக்‌ஷி என்ற திருநங்கை முதலிடத்தை பிடித்து மிஸ் பிள்ளையார்குப்பம் என்ற பட்டத்தை தட்டிச் சென்றார். இரண்டாம் இடத்தை ருத்ராவும், 3-ம் இடத்தை தானஸ்ரீ, 4-ம் இடத்தை ஐஸ்வர்யா, 5-ம் இடத்தை அன்னயா ஆகியோர் பிடித்தனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்பரிசு பெற்ற சாக்‌ஷி கூறுகையில், பிள்ளையார் குப்பத்தில் நடைபெற்ற அழகிகள் போட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தை பெற்றது பெருமை அளிக்கிறது.

இருந்தபோதிலும் புதுச்சேரியில் உள்ள திருநங்கைகளுக்கு இலவச மனைபட்டா அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வழங்க வேண்டும் என்றும், நலவாரியம் அமைத்து தர வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் திருநங்கைகளை அவர்களது பெற்றோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நிராகரிக்க கூடாது என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பிள்ளையார்குப்பம் மட்டுமின்றி புதுச்சேரியை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுநிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கரூரில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்

கஞ்சா குற்றவாளி படுகொலை முக்கிய குற்றவாளிகள் 3 பேரை கைது செய்து ஆயுதங்கள் பறிமுதல்