பல்கலைக்கழக ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் அரசின் கவனத்தை ஈர்க்க பல்கலைக்கழக வளாகத்தில் அண்டா வைத்து கஞ்சி காய்ச்சி குடித்தனர். இதன் பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 9 ஆம் தேதி சிதம்பரம் நகர வீதிகளில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும்.
ஆசிரியர், ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணப்பலன்கள், தொகுப்பு ஊதியர்கள் பனி நிரந்தரம், தனி அதிகாரிகள், தொடர்பு அதிகாரிகளின் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் உள்ள துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மற்றும் பதிவாளர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கோரிக்கை எதுவும் நிறைவேறாததால் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர்கள் இன்று கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு இன்று காலை குவிந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஊழியர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் நிர்வாக அலுவலக நுழைவு வாயிலில் பெரிய அண்டாவை வைத்து அடுப்பில் தீ மூட்டி கஞ்சி காய்ச்சினர். கஞ்சி காய்ச்சும் போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக் குழுவைச் சேர்ந்த பலரும் பேசினார்கள்.
இதையடுத்து கஞ்சி காய்ச்சி முடித்த பிறகு அனைவரும் டம்ளர்களில் கஞ்சியை ஊற்றி குடித்து தங்களது நிலையை அரசுக்கு தெரியப்படுத்தினர்.

இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியன்,
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பாக அனைவரின் கோரிக்கைகளையும் வலியுறுத்தி கடந்த 10 தினங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். காத்திருப்பு போராட்டம், முற்றுகை போராட்டம் அதன் தொடர்ச்சியாக இன்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் போதே நடத்தி உள்ளோம்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் கூட வழங்கப்படவில்லை. அதுபோல ஆசிரியர், ஊழியர்களின் பதவி உயர்வு, பணப்பலன்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் அரசு கிடப்பில் போட்டு விட்டது. இந்த நிலையில் நாளை அமைச்சர் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி இருக்கிறார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
வாழ்வாதாரத்தின் கடைசி கட்டத்தில் இருப்பதால் வருகிற 9 ஆம் தேதி சிதம்பரம் நகர வீதிகளில் முன்னாள் முதல்வர்கள், தற்போதைய முதல்வரின் புகைப்படங்களை மாட்டிக்கொண்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த இருக்கிறோம். எனவே அரசு அதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.


