சிதம்பரம் நடராஜர் கோயிலில் புராதன சின்ன ஆணையக் குழுவினர் நேரில் ஆய்வு.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் புராதன சின்ன ஆணையக் குழுவினர் நேரில் ஆய்வு. கோயிலில் மாநில அளவிலான நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டதா என்பது குறித்து நீதிமன்றம் அமைத்த ஆய்வுக் குழுவினர் சுமார் 3 மணி நேரம் ஆய்வு செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மாநில அளவிலான நிபுணர் குழு ஒப்புதல் பெறாமல் பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடராஜர் கோயிலில் ஆய்வு செய்வதற்காக இந்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற தலைமை இணை இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் பல்வேறு உறுப்பினர்கள் அடங்கிய புராதன சின்ன ஆணையத்தை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது
சிதம்பரம் கோயிலில் மாநில அளவிலான நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா என்பதை புராதன சின்ன ஆணையக்குழு நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் புராதன சின்னங்களின் ஆணைய தலைவர் நம்பிராஜன் தலைமையில் இந்த குழுவினர் இன்று நடராஜர் கோயிலில் ஆய்வில் ஈடுபட்டனர். நம்பிராஜனுடன் இந்திய தொல்லியல் துறையின் உதவி கண்காணிப்பாளர் ராஜேஷ், பேராசிரியர் சேகர் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
இந்த குழுவினருக்கு இந்து சமய அறநிலையத் துறையின் கடலூர் மாவட்ட இணை ஆணையர் ஜோதி, உதவி ஆணையர் சிவக்குமார் ஆகியோர் கோயிலின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காண்பித்தனர். அப்போது நடராஜர் கோயில் தீட்சிதர்களும் உடனிருந்தனர்.
காலை சுமார் 10:30 மணிக்கு வருகை தந்த ஆய்வு குழுவினர் கோயிலுக்குள் வெளிப்பிரகாரம், உள்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுமார் 3 மணி நேரம் ஆய்வு நடத்தினர். கோயிலில் கட்டுமானங்கள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட இடங்களையும் இந்த குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


