செஞ்சியில் இருசக்கர வாகனம் திருட்டு
செஞ்சியில் இருசக்கர வாகனம் திருட்டு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜேந்திரன் நகர் 3-வது தெருவில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
தனியார் சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணிபுரியும் உஸ்மான் என்பவருக்கு சொந்தமான TN 16 W 4343 என்ற பதிவு எண்ணுடைய ஹோண்டா டியோ இருசக்கர வாகனம் நேற்று இரவு சுமார் 10.40 மணியளவில் திருடப்பட்டுள்ளது.
நேற்று இரவு பெய்த பலத்த மழையில் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில்
இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும், இதே சூப்பர் மார்க்கெட் முன்பு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த XL சூப்பர் இருசக்கர வாகனமும் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, சூப்பர் மார்க்கெட் உரிமையாளரின் கேடிஎம் இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சம்பவத்தில், உரிமையாளரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய், திருடர்களை துரத்திச் சென்றதால், இருசக்கர வாகனத்தை திருட வந்த மர்ம நபர்கள் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செஞ்சி காவல் நிலைய போலீசாருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


