in

செஞ்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு முன்பு சுமை தூக்கும் கூலி தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம்.

செஞ்சியில் சுமை தூக்கும் கூலி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்

செஞ்சி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்குகளில் பணிபுரியும் சுமை தூக்கும் கூலி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கூலி உயர்வு வழங்க வேண்டும், நீதிமன்ற உத்தரவின்படி சங்கத் தேர்தலை நடத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் கூலி தொழிலாளர்களுக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.என்.சி.எஸ்.சி. சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் கூலி தொழிலாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சேமிப்பு கிடங்குகளில் பொது விநியோகத் திட்டத்திற்கான பொருட்கள் தேக்கம் அடைந்தன. இதனால் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம் மற்றும் நியாய விலைக் கடைகளுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவானது.

இதையடுத்து, வெளியில் இருந்து சுமை தூக்கும் கூலி தொழிலாளர்களை அழைத்து வந்து, சேமிப்பு கிடங்கில் இருந்த அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொது விநியோகப் பொருட்களை லாரிகளில் ஏற்றி அனுப்ப தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து TNCSC சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் கூலி தொழிலாளர்கள் சேமிப்பு கிடங்கு முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் சேமிப்பு கிடங்கு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து செஞ்சி போலீசார் பாதுகாப்புடன் பொது விநியோகப் பொருட்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பப்பட்டு வருகின்றன.

What do you think?

சிதம்பரத்தில் தனியார் மருத்துவமனையில் பரபரப்பு!