புதுச்சேரி சட்டசபை அருகே பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி சட்டசபை அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க பொது செயலாளர் பெருமாள் கண்டன உரையாற்றினார்.
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.60 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
தீவன மானியத்தை நேரடியாக வழங்காமல், ஆலை மூலம் உற்பத்தி செய்து தீவனமாக மானிய விலையில் வழங்க வேண்டும். பாலுக்கு லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
தேர்வு செய்த பயனாளிகளுக்கு 500 மாடுகளை உடனே வழங்க வேண்டும்.
ஆண்டுதோறும் விலைவாசிக்கு ஏற்பட பால் விலையை திருத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த கேன்களில் இருந்து பாலை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முன்னதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அண்ணா சிலை அருகே பால்கேன்கள், கறவை மாடுகளுடன் வந்தனர். அப்போது நகராட்சி அதிகாரிகள் மாடுகளை தெருக்களில் திரிய விடக்கூடாது எனக்கூறி அவற்றை பறிமுதல் செய்ய வந்தனர். இதையடுத்து பால் உற்பத்தியாளர்கள் மாடுகளை அழைத்து சென்றனர். பால் கேன்களுடன் அங்கிருந்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

