சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து இளம்பெண் விபரீத முடிவு!
சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி.
காதலன் விபத்தில் இறந்ததால் மன உளைச்சலில் திடீர் முடிவு. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளம்பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சிதம்பரம் அருகே உள்ள சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா (24). இவர் பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
பூஜா தனது பக்கத்து கிராமமான புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சென்னையில் பணியாற்றியபோதே பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது காதலன் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்து விட்டார். இதனால் பூஜா மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பூஜா இன்று தனது தாய் மற்றும் தங்கையுடன் மொபட்டில் அண்ணாமலைநகர் பகுதியில் இருந்து சிதம்பரம் நகருக்கு வந்துள்ளார். அப்போது சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் மொபட்டை நிறுத்தி விட்டு திடீரென மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.
அவர் கீழே குதித்த இடத்தில் இருந்த மரக் கிளையில் அடிபட்டு அங்கிருந்த பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தின் அருகே கீழே விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக பூஜாவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அண்ணாமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
