புதுச்சேரியில் இனி ஒரு மாணவரின் உயிரும் சாலை விபத்தில் பறிபோகக் கூடாது!
எதிர்கால கனவுகளோடு பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டுமே தவிர, சாலை விபத்துகளில் உயிரிழக்கக் கூடாது.
ஆனால் புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் சாலைகளைப் பயன்படுத்தும் காலை 7.30 முதல் 9.00 மணி வரையும், மாலை 4.00 முதல் 5.15 மணி வரையும் கனரக வாகனங்கள் மற்றும் அதிவேகமாக இயக்கப்படும் விபத்துகள் வாகனங்களால் தொடர்ந்து நடைபெறுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
சமீபத்தில் மேட்டுப்பாளையத்தில் பள்ளி முடிந்து சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஹர்ஷவி உயிரிழந்த சம்பவம், ஒவ்வொரு பெற்றோரின் மனதையும் பதறச் செய்துள்ளது. இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி ஒருபோதும் நடைபெறக் கூடாது.
எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்லும் மற்றும் திரும்பும் நேரங்களில் கனரக வாகனங்களின் இயக்கத்திற்கு தற்காலிக தடை விதித்தும், அதிவேகமாக இயக்கப்படும் அனைத்து வாகனங்கள் மீதும் தீவிர கண்காணிப்பு மற்றும் கடுமையான நடவடிக்கை எடுத்தும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

