in

மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி அவதார திருநாள் – 108 கிலோ கேக் வெட்டி பக்தர்கள் கொண்டாட்டம்

மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி அவதார திருநாள் – 108 கிலோ கேக் வெட்டி பக்தர்கள் கொண்டாட்டம்

24 மணி நேரம் தொடர் சிறப்பு பூஜைகள்; வாணவேடிக்கை, மிளகாய் வத்தல் யாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள 72 அடி உயர மஹா பிரத்தியங்கிரா காளி ஆலயத்தில், ஜென்மாஷ்டமியை முன்னிட்டு அம்மனின் அவதார திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி 108 கிலோ எடையிலான கேக் வெட்டப்பட்டு, வாணவேடிக்கைகளுடன் பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

மொரட்டாண்டியில் அமைந்துள்ள மஹா பிரத்தியங்கிரா காளி ஆலயத்தில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவ பலி பூஜை, குருதி பூஜை மற்றும் மிளகாய் வத்தல் யாகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

ஜென்மாஷ்டமி தினம் பிரத்தியங்கிரா காளியின் அவதார தினமாக ஆலயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், ஆண்டுதோறும் இந்த நாள் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அவதார திருநாள் விழா, ஆலய பீடாதிபதி நாடாத்தூர் ஜனார்த்தன சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி வரத தேசிகன் தலைமையில் நடைபெற்றது. காலை முதலே பிரத்தியங்கிரா காளிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

தொடர்ந்து நள்ளிரவில் பைரவ பலி பூஜை மற்றும் குருதி பூஜைகள் நடைபெற்றன. நள்ளிரவு 12 மணிக்கு மேல் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகள் முழங்க, “பிரத்தியங்கிரா காளிக்கு ஜெய்! ஜெய்!” என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது சிறுவர்கள் முன்னிலையில் 108 கிலோ எடையிலான பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு அம்மனின் அவதார திருநாள் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. அதிகாலை 4 மணி வரை நடைபெற்ற யாகத்தின் நிறைவில் கலச புனித நீரைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

காலை 5 மணிக்கு தொடங்கிய பிரத்தியங்கிரா காளி அவதார திருநாள் வழிபாடுகள் மறுநாள் காலை 5 மணி வரை தொடர்ந்து 24 மணி நேரம் பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றன.

பிரத்தியங்கிரா காளியை வழிபடுவதன் மூலம் தீய சக்திகள், தடைகள் மற்றும் எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன், சகல ஐஸ்வர்யங்களும் நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

What do you think?

ஏனாம் கோதாவரி ஆற்றில் பிறந்தநாள் கொண்டாட்டம் – தவறி விழுந்த கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி பலி