நாகப்பட்டினத்தில் பழமையான ஆர்ட்டீசியன் நீரூற்றை மீட்கக் கோரி ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பினர் ஆட்சியரிடம் மனு
நாகப்பட்டினம் நகரம் 13-வது வார்டுக்குட்பட்ட தெற்குப்பால்பண்ணைச்சேரி மாரியம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள பழமையான ஆர்ட்டீசியன் தன்னூற்றை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, சீரமைத்துத் தர வேண்டும் என ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பூமியிலிருந்து தானாகவே 24 மணி நேரமும் நீர் சுரக்கும் தன்மை கொண்ட இந்த ஆர்ட்டீசியன் ஊற்று, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வந்தது. குறிப்பாக, உலகப் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்கா திருவிழாக்களுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களும், பொதுமக்களும் தங்களின் குடிநீர் தேவைக்கும், குளிப்பதற்கும் இந்தத் தன்னூற்றையே பல தசாப்தங்களாகப் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாகப் போதிய பராமரிப்பின்றி இந்த ஊற்றிலிருந்து நீர் வருவது முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட சிலர், அரசுக்குச் சொந்தமான அந்த நிலத்தை ஆக்கிரமித்துக் கொட்டகை அமைத்திருப்பதுடன், சட்டவிரோதமாக மின் இணைப்பும் பெற்றுப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது நாகப்பட்டினம் நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், இந்த நீரூற்றை உடனடியாகத் தூர்வாரிச் சீரமைத்தால் மக்களின் தாகத்தைத் தீர்க்க முடியும் என்று பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், ஆர்ட்டீசியன் தன்னூற்றைச் சரிசெய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் மற்றும் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் சக்தி ராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.
