சிதம்பரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து. இளைஞர் தப்பி ஓட்டம். காயமடைந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. ஒரு தலைக்காதலால் தகராறா என போலீசார் விசாரணை
சிதம்பரம் அருகே உள்ள கீழமூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அருகில் உள்ள சி.முட்லூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தாயுடன் வசித்து வரும் சிறுமி, இன்று விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். அவரது தாயார் சிதம்பரத்தில் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் சி.முட்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(27) என்பவர் வீட்டில் தனியாக இருந்த மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாகவும், இதில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஐயப்பன் கையில் வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து மற்றும் முதுகில் குத்தியுள்ளார். பின்னர் ஐயப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ரத்தக் காயங்களுடன் கடந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா காவல் நிலைய போலீசார் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். மேலும் கீழமூங்கிலடி கிராமத்துக்கு சென்ற போலீசார் அவரது வீட்டிலும் விசாரணை நடத்தினர்.
மாணவியை ஐயப்பன் காதலிக்க சொல்லி வற்புறுத்தி கத்தியால் குத்தினாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து சிதம்பரம் தாலுகா காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஐயப்பனையும் தேடி வருகின்றனர்.


