கும்பகோணம் தாராசுரத்தில் குடிநீர் கேட்டு அதிமுக காலி குடத்துடன் முற்றுகை போராட்டம்
கும்பகோணம் தாராசுரம் பகுதியில் 30-வது வார்டு முதல் 35-வது வார்டு வரை குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து அதிமுக சார்பில் காலி குடத்துடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
தாராசுரம் பகுதியில் உள்ள 6 வார்டுகளுக்கு கடந்த பல நாட்களாக முறையாக குடிநீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் அதிமுக மாநகர செயலாளர் ராம ராமநாதன், மாமன்ற உறுப்பினர் பத்ம குமரேசன், கைத்தறி பிரிவு மாநில செயலாளர் கே.ஜி. லெனின் ஆகியோர் காலி குடத்துடன் மாநகராட்சி அலுவலக வாயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆணையரிடம் மனு தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் காந்திராஜை நேரில் சந்தித்து, உடனடியாக சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.
மக்கள் குமுறல் “5 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். மாநகராட்சி சார்பில் ஒரே ஒரு லாரி மூலம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என பொதுமக்கள் எச்சரித்தனர்.


