நெல் மூட்டைகள் தேக்கம் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம்
கும்பகோணத்தில் நெல் மூட்டைகள் தேக்கம் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம்
கும்பகோணத்தில், தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் குவியல் குவியலாக நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையத்திலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை இயக்கம் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பருவகால பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இணைந்து சுமூகமான தீர்வை ஏற்படுத்தி நெல் கொள்முதல் பணியை உடனடியாக துவங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் புஷி ஆனந்த், விவசாயிகள் பிரச்சனையை கவனிக்காமல் “ஜனநாயகம்” திரைப்படத்தை அனைவரும் பாருங்கள் என கூறியது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

கண்ணீருடன் இருக்கும் விவசாயிகளின் பிரச்சனைக்கு கூடுதல் கவனம் செலுத்தாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம் சாட்டினர்.
தேக்கமடைந்த நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யவும், பணியாளர்களுடன் பேச்சுவார்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணவும் அமைச்சர்கள் உடனடியாக தலையிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


