வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
4 ஆண்டுகளாக RTO இல்லாததால் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
கும்பகோணம்: அருகே பட்டீஸ்வரம் கொற்கை பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நிரந்தர அலுவலர் இல்லாததால், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பணிகள் முடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 3 தாலுகாக்கள் மற்றும் சுமார் 40 கி.மீ சுற்றளவுக்கு சேவை வழங்கும் இந்த அலுவலகத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வருகின்றனர்.
ஆனால் 2021-க்கு பிறகு இங்கு நிரந்தர வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நியமிக்கப்படவில்லை. தஞ்சாவூர் RTO ஜெய்சங்கர் கூடுதல் பொறுப்பாக வாரத்திற்கு 2 முறை வர வேண்டிய நிலையிலும் அவரும் சரிவர வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் மாதக்கணக்கில் அலைந்தும் பணி முடியாத விரக்தியில் இருந்த பொதுமக்கள், இன்று அலுவலர் வரவில்லை என ஊழியர்கள் கூறியதை அடுத்து “அதிகாரி வரும் வரை செல்ல மாட்டோம்” என அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், “RTO பணியை எங்களால் செய்ய முடியாது. கூடுதல் பொறுப்பு அதிகாரியும் திடீர் விடுப்பு எடுக்கிறார். நிரந்தர அதிகாரி நியமிக்கப்படும் வரை இந்த நிலை தொடரும்” என கவலை தெரிவித்தனர்.
இதனால் தமிழக அரசு உடனடியாக கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நிரந்தர RTO மற்றும் ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


