பயிர் கடன் தள்ளுபடி வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்பாட்டம்
கும்பகோணம் அருகே சிற்றிடையாநல்லூரில் முழு பயிர் கடன் தள்ளுபடி வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்பாட்டம்
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியம் சிற்றிடையாநல்லூரில் பாலக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட விவசாயிகள், முழு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கையில் நெற்கதிர்களை வைத்துக் கொண்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய விவசாயிகள்: “தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் முழு பயிர் கடனை தள்ளுபடி செய்வேன் என கூறியது. ஆனால் சிறு, குறு விவசாயிகள் என 10 சதவீதம் பேருக்கு மட்டுமே பயிர் கடன் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 90 சதவீத விவசாயிகள் பயனடையவில்லை.

ஏற்கனவே இருந்த அரசுகள் மிகப்பெரிய அளவில் பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளன. அதை முன்உதாரணமாக கொண்டு இந்த அரசும் உடனடியாக முழு பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டால் தான் நாட்டின் பொருளாதாரம் சிறக்கும்.
மேலும் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப் போராட்டம் மற்றும் மக்கள் போராட்டம் நடத்தி அதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும்.
தற்போது டி.பி.சி-க்கள் முழுமையாக திறக்கப்படவில்லை. எங்கு பார்தாலும் நெல் குவியல்கள் கொட்டி கிடக்கின்றன. நெல் கொட்டுவதற்கு இடமில்லாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அவசர கதியில் அனைத்து டி.பி.சி-களையும் திறக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.


