in

புதுச்சேரி சட்டசபை 22ந் தேதி கூடுகிறது இடைக்கால பட்ஜெட் தாக்கல்


Watch – YouTube Click

 

புதுச்சேரி சட்டசபை 22ந் தேதி கூடுகிறது இடைக்கால பட்ஜெட் தாக்கல்

 

புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் சட்டசபையில் 2011ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9ம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாக கடந்த செப்டம்பர் 9ந் தேதி மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டது.

ஒருநாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிடுவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வரும் 22ந் தேதி காலை 9.45 மணிக்கு சட்டசபை கூடுகிறது.

அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதல அமைச்சர் ரங்கசாமி, 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனேகமாக 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

சட்டசபை கூடும் தகவலை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,
2024-25ம் நிதியாண்டுக்கான முன்னளி மானிய திட்ட முன்வரைவு பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துகை செய்யப்படும். பேரவை முன் வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும்.

2024-25ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும் என கூறினார்.

தற்போது இயங்கி வரும் சட்டமன்ற கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும் முழுமையாக பராமரித்து அதன்பிறகு கூட்டத்தை நடத்தும் சூழல் உள்ளது. அதோடு சட்டசபையின் நிலையை கருத்தில்கொண்டு தான் தரை தளத்தில் இல்லாமல், புதிய கட்டிடத்தின் 4வது மாடியில் சபாநாயகர் அலுவலகத்தை அமைத்துள்ளோம்.

புதிய சட்டமன்றத்துக்கு மத்திய அரசும், பிரதமரும் ஒப்புதல் அளித்துவிட்டனர். இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 5 மாதமாக துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

அவர் அளவீட்டில் சில விளக்கங்களை கேட்டுள்ளார். அதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய சட்டசபை கட்டாயம் கட்டப்படும். இந்த பழைய கட்டிடம் அதிகபட்சமாக ஓராண்டுதான் தாக்குப்பிடிக்கும். இதனால் விரைவில் புதிய சட்டசபைக்கு பூமி பூஜை நடத்துவோம். அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகளை மாற்றியுள்ளோம் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் கதைச்சுருக்கத்தை எழுதி வெளியிட்டு சாதனை

திமுகவில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு