புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி தோல்வியடைந்ததற்கு தி.மு.க மாநில அமைப்பாளர் சிவாவின் தன்னிச்சையான செயல்பாடுகளும், சுயநல அரசியலுமே காரணம்
புதுச்சேரியின் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற பேராசையில், தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பேச்சைக்கூடக் கேட்காமல் இந்தியா கூட்டணிக்குள் திட்டமிட்டுத் தொடர் குழப்பங்களை ஏற்படுத்தியவர் சிவா தான் என அவர் சாடியுள்ளார்.
மேலும், கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குச் சீட்டு ஒதுக்கிய சிவா, இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குச் சீட் தராமல் துரோகம் இழைத்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் வாய் மூடி மௌனமாக முதலமைச்சர் ரங்கசாமிக்கு ஆதரவாகச் செயல்பட்ட சிவா, தற்போது திடீரென அவரை விமர்சிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள பாலன், முதலமைச்சருக்கு ஐந்து புரோக்கர்கள் உள்ளார்கள் என்று இப்போது கூறும் சிவா, கடந்த 5 வருடங்களாக இதைப் பற்றிப் பேசாமல் அமைதி காத்தது ஏன் என்றும், முன்னாள் தி.மு.க முதலமைச்சர் ஜானகிராமனுக்குத் துரோகம் இழைத்தவரே இந்தச் சிவா தான் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்துவிட்டு மற்ற கூட்டணி கட்சிகளை மட்டும் வைத்து முதல் கூட்டத்தை நடத்தியது யார் என்றும், ‘ஓடாத வண்டி’, ‘கடலூரைத் தாண்டினால் காலில் விழுவோம்’ என்றெல்லாம் காங்கிரஸைக் கீழ்மட்டமாக விமர்சித்தது யார் என்றும் அவர் வினவியுள்ளார்.
மேடைகளில் கீழ்த்தரமாகப் பேசுபவர்கள் யாரும் உண்மையான காங்கிரஸ் கட்சியினர் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள அவர், தைரியமிருந்தால் நேரடியாகப் பொது மேடையில் என்னுடன் விவாதிக்கச் சிவா தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.


