நீட் போராட்டம் முடிவுக்கு வர புதுச்சேரியில் தனியாக பிரார்த்தனை
புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸின் மாநில செயலாளர் சிலோசனா, டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தேர்வு தொடர்பான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் முடிவுக்கு வந்து, மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி புதுச்சேரி கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு தனியாக பிரார்த்தனை மேற்கொண்டார்
.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியா முழுவதும் நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களைத் தொடர்ந்து மாணவர்கள் நடத்தி வரும் அகிம்சை மற்றும் அறவழிப் போராட்டங்களை அனைவரும் கவனித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், போராட்டங்களில் காயமடைந்த மாணவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், தங்கள் பிள்ளைகளை கடின உழைப்பால் படிக்க வைத்த பெற்றோரின் எதிர்பார்ப்புகளுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், நாட்டில் அமைதியான சூழல் நிலவவும், டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு விரைவில் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்காக, அகிம்சையின் அடையாளமான மகாத்மா காந்தியின் கொள்கைகளை நினைவுகூரும் வகையில், புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை முன்பு தனியாக பிரார்த்தனை செய்து, டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டதாக சிலோசனா தெரிவித்தார்.


