செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிக விமானத்தில் செல்கிறார்கள்
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை புதிய கல்வியாண்டு தொடக்க விழா நடைபெற்றது. 932 மாணவ-மாணவிகள் பயிலும் இப்பள்ளியில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 146 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 99.3% தேர்ச்சி விகிதம் பெற்றதை பாராட்டி விழா நடந்தது.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பேசில் ககாரின் மற்றும் இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், அதிமுக முன்னாள் எம்.பி-யுமான சௌந்தரராஜன் ஆகியோர் சாதனை மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டினர்.
தொடர்ந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் ரொக்க பரிசுகள் வழங்கினார். முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் கேடயங்கள் வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த ஆண்டு நடந்து முடிந்த தேர்வில் “10ஆம் வகுப்பில் 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்ற முகமது ஜாஹித், இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தவர்கள், 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள், பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 6 மாணவர்கள் என மொத்தம் 12 மாணவ-மாணவிகளையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் இம்மாத இறுதியில் எனது சொந்த செலவில் மூன்று நாட்கள் விமானம் மூலம் சென்னை இன்ப சுற்றுலா அழைத்துச் செல்கிறேன்” என அறிவித்தார்.
விழாவின் முடிவில் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் இனிப்புகள், குளிர்பானங்கள், ஸ்னாக்ஸ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நல்லாசிரியர் ஜேசு, முன்னாள் மாணவர்கள் வசந்தி, ராஜம், குமரேசன், ஏசுதுரை, பெற்றோர் கழக நிர்வாகிகள் லிங்கதுரை, குமார வேலாயுதம், சுடலைமணி, மேலாண்மை குழு உறுப்பினர்கள் சுடலைமணி, ராமலிங்கம், சுவாமிநாதன் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


