பயிர் கடன் தள்ளுபடி கோரி நாகையில் 56 இடங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 56 இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் திருப்பூண்டி மற்றும் வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முன்பு அதிமுக ஒன்றிய செயலாளர் வேதையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிமுக நிர்வாகிகள், கட்சி சார்பற்ற விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, “தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையான பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு எந்த பயனும் அளிக்கவில்லை” என கூறி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல நாகை மாவட்டத்தில் பாலக்குறிச்சி, கீழையூர், திருமருகல், கீழ்வேளூர், திருக்குவளை உள்ளிட்ட 56 இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


