மலேசியாவில் உயிரிழந்த ஆண்டிபட்டி இளைஞர்; மரணத்தில் மர்மம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
தேனி மாவட்டம் வருசநாடு அருகே கோவில்பாறை மலை கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் தாளமுத்து என்பவரின் மகன் விஜயபாரதி 29 வயதான இவர் தனது குடும்ப கடனை அடைப்பதற்காக தனது மனைவி கார்த்திகா, 3 வயது பெண் குழந்தை மற்றும் குடும்பத்தினரை பிரிந்து மலேசியாவில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் கூலி வேலைக்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தார்.
திடகாத்திரமான உடல்நலத்துடன் பணியாற்றி வந்த விஜயபாரதி இன்று காலை மாரடைப்பால் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அவரது சொந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜயபாரதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி கார்த்திகா மற்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
விஜயபாரதியுடன் வேலை செய்த 3 நபர்கள் அவருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையான தொந்தரவுகளை கொடுத்து வந்ததே அவரது மரணத்திற்கு காரணம் எனக் கூறும் குடும்பத்தினர் .
இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியரிடமும் உருக்கமான மனு ஒன்றை அளித்துள்ளனர்.அதில், மலேசியாவில் உள்ள தனது கணவரின் உடலை அரசு செலவில் தாயகம் மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது உடலை மறுபிரேத பரிசோதனை செய்து மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்றும் வலியுறுத்தியுள்ளனர்.மேலும், குடும்பத் தலைவனை இழந்து 3 வயது குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் தங்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, தமிழக முதலமைச்சர் தங்களுக்கு உரிய வாழ்வாதார உதவி வழங்கிட வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடும்பக் கஷ்டத்திற்காக மலேசியா சென்ற வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் கோவில்பாறை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


