டாஸ்மாக் கடைகளை மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
நாகை பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
நாகப்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி “WE THE LEADERS” நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் திரு.கே.ஜே.பிரவீன் குமாரிடம் மனு அளித்தனர்.
குழுவை சேர்ந்த ஆறுமுகம், ராஜேஷ், பாலாஜி, குணாளன், தெட்சணாமூர்த்தி, மணிகண்ட பிரகாஷ் ஆகியோர் மனுவை வழங்கினர்.
அந்த மனுவில், தமிழக அரசு கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் பகுதிவாரியாக 717 டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாகப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே செயல்படும் டாஸ்மாக் கடை எண் 5605 மற்றும் அரசு மருத்துவமனை அருகே செயல்படும் டாஸ்மாக் கடை எண் 5606 ஆகியவை இதுவரை மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

இந்த இரண்டு கடைகளால் பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பெரும் இடையூறுகளையும் அசௌகரியங்களையும் சந்தித்து வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசின் உத்தரவிற்கு முரணாக இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
எனவே இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூடிட சம்பந்தப்பட்ட துறையினருக்கு உரிய உத்தரவு பிறப்பித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


