குறைந்த மின்னழுத்தத்தால் நள்ளிரவு வரை மக்கள் அவதி!
குறைந்த மின்னழுத்தம் காரணமாக நள்ளிரவு 2 மணி வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமில்லாமல் தவித்து வருவதாக பொதுமக்கள் குமுறல்…..
மின்மாற்றி அமைக்க மின் உபகரணங்கள் வந்தும் மின்மாற்றி பொறுத்த முடியாத அவல நிலை…..
திருவண்ணாமலை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் சத்துணவு கூட தெரு உள்ளது. இந்த தெருவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாய கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தெருவில் மட்டும் கடந்த நான்கு வருடங்களாக குறைந்த மின்னழுத்தம் இருந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதியி மக்கள் மின்வாரிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் மனு அளித்தனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். குறிப்பாக சத்துணவு கூட தெருவின் அருகே சின்னகுழவன்குட்டை தெரு உள்ளது. இந்த சின்னகுழவன்குட்டை தெருவின் அருகே உயர்மின் அழுத்தம் செல்லும் இணைப்பு உள்ளது.
இதனால் அந்த உயர்மின் அழுத்தம் செல்லும் இணைப்பில் இருந்து மற்றொரு இணைப்பு எடுத்து மின்மாற்றி அமைத்து தங்களது தெருவிற்கு சீரான மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சின்னகுழவன்குட்டை தெருவில் இருந்து மின் இணைப்பு பெற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மின்மாற்றி அமைக்க முடியாமல் மின்சார ஊழியர்கள் தவிர்த்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த 10 தினங்களுக்கு முன்பு மின்மாற்றி அமைக்க தேவையான அனைத்து மின் உபகரணங்களும் சத்துணவு கூட தெருவில் உள்ள ஒரு வீட்டில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
சின்னகுழவன்குட்டை தெருவில் உள்ள சில நபர்கள் திமுகவை சார்ந்தவர்கள் என்பதால் அவர்களின் எதிர்ப்பை மீறி மின்வாரிய ஊழியர்களால் மின்மாற்றி அமைக்க முடியவில்லை. இதனால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு கூட தெரு மக்கள் புகார் மனு அளித்தனர்.
மேலும் கடந்த நான்கு வருடங்களாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக தங்களது வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், குறிப்பாக நள்ளிரவு 2 மணி வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூங்காமல் விழித்திருப்பதாகவும், மின்விசிறி தொலைக்காட்சி பெட்டி மிக்ஸி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்துள்ளதாகவும் உடனடியாக தங்கள் பகுதியில் மின்மாற்றி அமைத்து சீரான மின்சாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


