நாகை வேளாங்கண்ணியில் புதிய பறவைகள் பூங்கா திறப்பு
நாகை வேளாங்கண்ணியில் புதிய பறவைகள் பூங்கா திறப்பு – சிறகடிக்கும் பறவைகளை கண்டு மனம் லயிக்கும் பார்வையாளர்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்கா இன்று திறக்கப்பட்டது. சிறகடித்து பறக்கும் வண்ணப் பறவைகளை கண்டு பார்வையாளர்கள் மனம் லயித்து செல்கின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

அவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக அமையும் வகையில், நாகை மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஆகாஷ் முன்முயற்சியால் வேளாங்கண்ணி அருகே பிரதாப ராமபுரம் பகுதியில் இந்த பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சி குழுவும் தனியார் நிறுவன முதலீட்டுடனும் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் 500-க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இடம்பெற்றுள்ளன.

வண்ணக்கிளிகள், லவ் பேர்ட்ஸ், காக்டைல் உள்ளிட்ட சிறிய பறவைகள் முதல் ஈமு கோழி, நெருப்புக்கோழி போன்ற பெரிய பறவைகள் வரை தனித்தனி அரங்குகளில் பறந்து திரிகின்றன. வெளிநாட்டு பறவைகளும் இங்கு சிறகடித்து பார்வையாளர்களை கவர்கின்றன.
பறவைகள் மட்டுமின்றி, குழந்தைகள் விளையாடும் பூங்கா, பார்க்கிங் வசதி, மினி கேண்டீன், பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
கோமாதா, முயல்கள், அரிய வகை பூனைகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய வண்ண மீன் அரங்கம், விதவிதமான பாம்புகள் கொண்ட அரங்கம் என குடும்பத்துடன் குதூகலிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


