காணொளி மூலம் தொடங்கி வைத்த சிலம்பாட்ட போட்டி
2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்ற இந்திய அளவிலான சிலம்பாட்ட போட்டி மத்திய அமைச்சர் எல்.முருகன் காணொளி மூலமாக தொடங்கி வைத்தார்….
திருவண்ணாமலையில் 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்திய அளவிலான சிலம்பாட்ட போட்டியினை மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று காணொளி மூலமாக தொடங்கி வைத்தார்.

தமிழர்களின் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டினை ஆண்கள், பெண்கள் என அனைவரும் தற்போது கற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் சிலம்பாட்ட வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பாரத சிலம்ப கூட்டமைப்பு சார்பில் முதலாவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கியது. இப்போட்டி நாளை மறுநாள் 19ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 11, 14, 17, 19, 21, 26, 31 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 ஆயிரம் பேர் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
இன்று 11 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியை மத்திய அமைச்சர் எல்.முருகன் காணொளி மூலமாக துவக்கி வைத்தார்.


