வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்திரிய மாதா ஆண்டு திருவிழா தேர்பவனி
வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்திரிய மாதா ஆண்டு திருவிழா தேர்பவனி விமர்சையாக நடைபெற்றது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி: உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் உத்திரிய மாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு இன்று தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள இந்த பேராலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இது முக்கிய சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது.
கீழை நாடுகளின் “லூர்து நகர்” என அழைக்கப்படும் இந்த ஆலயம், இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிடங்களில் “பசிலிக்கா” என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளது. வங்கக் கடலோரம் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் உத்திரிய மாதா ஆண்டு திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் நவநாள் திருப்பலிகள் மற்றும் சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது.

ஆண்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடைபெற்றது. முன்னதாக மிக்கேல் அதிதூதர், அடுத்து புனித செபஸ்தியார் சொரூபம் அடங்கிய தேரும், கடைசியாக உத்திரிய மாதா சொரூபம் அடங்கிய மின் அலங்கார தேரையும் பங்குத்தந்தை அகஸ்டின் புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.
தேரானது கடற்கரை சாலை, ஆரியநாடார் தெரு வழியாக பவனி வந்து பேராலயத்தை வந்தடைந்தது.
முன்னதாக பங்குத்தந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் இருதயராஜ் தந்தையர்கள், பங்கு மக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்த மக்கள் என திரளானோர் கலந்து கொண்டு மாதாவை தரிசித்தனர்.


