திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றம்
அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனிப் பெருந்தோ்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தாிசனம்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் மிகப் பழமைவாய்ந்தது.

முன்னொரு காலத்தில் வேத சர்மா இறைவனுக்கு திருவமுது படைக்க காயப்போட்டிருந்த நெல் மழையினால் நனையாத படி வேலியிட்டுக் காத்ததால் இறைவன் நெல்வேலி நாதா் என சிறப்பு பெயா் பெற்று ஊருக்கு திருநெல்வேலி என பெயா் வரக் காரணமானவா்.
திக்கெல்லாம் புகழறும் திருநெல்வேலி என்று திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற பெருமையுடையதும், பஞ்ச சபைகளில் தாமிர சபை இங்கு அமைந்திருப்பதும் என பற்பல சிறப்புகள் நிறைந்தது.
48½ நாட்கள் நடைபெறும் இந்த ஆனிப்பெருந்திருவிழா கடந்த ஜீன் மாதம ஊா்க்காவல் தெய்வமான பிட்டாபுரத்தி அம்மன் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடா்ந்து விநாயகர் திருவிழா, மூவர் திருவிழா, சந்திரசேகரர் பவானி அம்பாள் திருவிழா என சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஆனிபெருந் தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றி வர, ஆனிப்பெருந்திருவிழாவின் பூர்வாங்க பூஜைகளில் நடைபெற்று திருக்கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட ஆனிப்பெருந்திருவிழாவில் எழுந்தருளும் பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 3 மணிக்கு திருக்கோவில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபம் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கும் மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது.
சுவாமி அம்பாள் ஆலய பிரதான கொடிமரத்திற்கு அருகில் ஏழுந்தருள கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்றது. காலை 06.30 மணிக்கு மேல் 07.48 க்குள் மிதுன லக்னத்தில் திருக்கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

தொடா்ந்து கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றதும், பட்டு வஸ்திரம் மலா் மாலைகளால் அலங்காரம் செய்விக்கப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவாமூர்த்திகள் பஞ்சபுராணம் பாட கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி சோடச உபசாரனைகள் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவில் தினமும் சுவாமி அம்பாள் காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்து ரதவீதிகளில் வீதிஉலா நடைபெறும்.
கோயில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமயச்சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மீகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசைக்கச்சேரி, புராண நாடகம், என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான சுவாமி நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் திருத்தேரோட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் அறங்காவல் குழுவினா் சிறப்பாக செய்திருந்தனர்.


