மங்கைமடம் வீர நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண விழா கோலாகலம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மங்கைமடம் கிராமத்தில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான வீர நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது..
பஞ்ச நரசிம்மர் சேத்திரத்தில் 2வது தலமான இங்கு திருமங்கை மன்னன் குமுதவல்லியை திருமணம் புரிய 1008 வைணவர்களுக்கு ஒரு வருடம் ததி ஆராதனை செய்து பெருமாளின் பேரருளை பெற்று திருமங்கை ஆழ்வார் ஆன திவ்ய தேசமும் திருமங்கை வளநாடு என போற்றப்படும் சேத்திரமே மங்கைமடம் வீர நரசிம்ம பெருமாள் திருக்கோவில்.
இங்கு பெருமானை சேவித்தால் கிரக தோஷங்கள் நீங்கி திருமணம் கைகூடும் மற்றும் சகல தோஷங்களும் நீங்கி அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா பராபவ வருடம் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
ஏழாம் நாள் திருவிழாவான இன்று திருக்கல்யாணமும் அதனைத் தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு செங்கமலவல்லி சமேத வீர நரசிம்ம பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருள மாலை மாற்றுதல்,காப்பு கட்டுதல், பட்டு வஸ்திரம் அணிவித்து மற்றும் சிறப்பு யாக பூஜைகள் செய்யப்பட்டு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்த வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்ம பெருமாள் சேவித்தனர்.

