பி.பி.எல். டி20 கிரிக்கெட்: வில்லியனூர் மோகித் கிங்ஸ் சாம்பியன்; 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (PPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வில்லியனூர் மோகித் கிங்ஸ் அணி, மாகே ஸ்டிரைகர்ஸ் அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
துத்திப்பட்டு சிகெம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற மாகே ஸ்டிரைகர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த வில்லியனூர் மோகித் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முகூல் ராகவ் மற்றும் பானு ஆனந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பவர்பிளே ஓவர்களின் கடைசி பந்தில் பானு ஆனந்த் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து முகூல் ராகவ் 41 ரன்கள் எடுத்தார். அமன் கான் (11), ஹர்ஷ் வைஷ்ணவ் (3), பிரித்வி கண்ணா (6), சாஹில் சஞ்சிவ் (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதிக்கட்டத்தில் ஆகாஷ் மற்றும் ஹாரிஸ் மரைக்கார் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் வில்லியனூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.
201 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மாகே ஸ்டிரைகர்ஸ் அணி, வில்லியனூர் அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் வில்லியனூர் மோகித் கிங்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, பாண்டிச்சேரி பிரீமியர் லீக் தொடரில் 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருது ஆகாஷ் புகழேந்திக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வில்லியனூர் அணியின் கேப்டன் அமன் கானுக்கு வழங்கப்பட்டது.


