ஓசூர் மோரனபள்ளி ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மோரனபள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி திருக்கோவிலில் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மிளகாய் வத்தல் யாகங்கள் நடைபெற்றன.
இதையொட்டி, கோவில் வளாகத்தில் பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு ஹோமம் மற்றும் யாகம் வளர்க்கப்பட்டது. பக்தர்களின் நலன் மற்றும் உலக நன்மைக்காக நடைபெற்ற இந்த வழிபாட்டில், கண் திருஷ்டி, பில்லி சூனியம் உள்ளிட்ட தீய பாதிப்புகள் நீங்கும் வகையில் மிளகாய் வத்தல் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் யாகத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
தொடர்ந்து மகா பிரத்தியங்கிரா தேவிக்கு புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த சிறப்பு பௌர்ணமி வழிபாட்டில் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பௌர்ணமி சிறப்பு பூஜையால் கோவில் வளாகம் முழுவதும் பக்தி பரவசத்துடன் காணப்பட்டது


