in

உத்தனப்பள்ளியில் ஸ்ரீ ரேணுகா எல்லம்மா தேவி ஆலய மஹா கும்பாபிஷேகம்

உத்தனப்பள்ளியில் ஸ்ரீ ரேணுகா எல்லம்மா தேவி ஆலய மஹா கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி–கெலமங்கலம் சாலையில் அமைந்துள்ள சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரேணுகா எல்லம்மா தேவி ஆலயம் புனரமைக்கப்பட்டு, ஜீர்ணோத்தாரணம், பிரதிஷ்டாபனை மற்றும் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாகசாலைகள் அமைக்கப்பட்டு, வேத பண்டிதர்கள் முன்னிலையில் பல்வேறு புனித திரவியங்கள் கொண்டு சிறப்பு யாகங்கள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பூர்ணாஹுதி நடைபெற்றது.

யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களில்
காப்பு கட்டி, பக்தர்கள் உத்தனப்பள்ளி முக்கிய வீதிகள் வழியாக புனித கலசங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் ரேணுகா எல்லம்மா தேவியை போற்றி பக்தி கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் கோவில் விமானம் மற்றும் ஸ்ரீ ரேணுகா எல்லம்மா தேவி சன்னதி மீது புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, வண்ண வண்ண மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டார்.

தொடர்ந்து தூப, தீப ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் உத்தனப்பள்ளி மற்றும் கெலமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரேணுகா எல்லம்மா தேவியை வழிபட்டு தரிசனம் செய்தனர்.

நூற்றாண்டு கால பழமை வாய்ந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றதையடுத்து, விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டதாகவும், இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ எல்லமாதேவி கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது

What do you think?

25 வகையான கேரள உணவுகள் வாழை இலையில் பரிமாற்றம்

களிமண்குண்டு காந்தாரி அம்மன் ஆலயத்தில் 156ஆம் ஆண்டு முளைக் கொட்டு பூக்குழி பெருவிழா