in

விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க சட்டப்பேரவையில் வலியுறுத்துவேன் – எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க சட்டப்பேரவையில் வலியுறுத்துவேன் – எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த்

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது, விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டப்பேரவையில் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

“2007–08 ஆம் ஆண்டில் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் திறந்து வைத்த பயணியர் நிழற்குடை தற்போது சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அரசு அச்சகத்திற்கு நேரில் சென்று அங்குள்ள ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்தேன். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் பணியாற்றும் அந்த அச்சகத்தில் சாலை மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதுகுறித்து மனு அளித்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்த உள்ளேன். ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், மானியக் கோரிக்கை விவாதத்தின்போது விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளை முன்வைப்பேன்.

பட்டா, குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட சுமார் 30 கோரிக்கைகளை மக்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.

திடக்கழிவு மேலாண்மை மையத்தையும் ஆய்வு செய்தோம். அங்கு பிளாஸ்டிக் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு அரியலூர் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகின்றன. மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. குப்பையில்லா, சுத்தமான மற்றும் சுகாதாரமான தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெறும் மாணவர் போராட்டத்திற்கு தமிழ்நாட்டிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மக்கள் விரும்புவதை அரசுகள் செயல்படுத்த வேண்டும். நீட் விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய முடிவை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் ஆட்சிக்கு 50 நாட்களே ஆகியுள்ள நிலையில், இன்னும் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை, டெண்டர்களும் விடப்படவில்லை, அடிப்படை பணிகள்கூட தொடங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் தான் மதிப்பிட வேண்டும். மக்கள் தீர்ப்பே இறுதியான தீர்ப்பாகும்.

விலைவாசி உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவிரி நீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

விவசாயிகளை பாதுகாப்பதே மக்களை பாதுகாப்பதாகும். அதனால் விவசாயிகளுக்கு ஆதரவாக தேமுதிக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஒகேனக்கல்லில் மேகதாது அணைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.

இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ‘எல் நினோ’ தாக்கம் காரணமாக வரட்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும்.”

இவ்வாறு விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

What do you think?

புதுச்சேரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்; சபாநாயகர் அன்பழகன் தொடங்கி வைத்தார்

பண்ருட்டி அருகே மூதாட்டி வீட்டில் பீரோவை உடைத்து வெள்ளி மற்றும் 75 ஆயிரம் பணம் திருட்டு போலீஸ் தீவிர விசாரணை