பண்ருட்டியில் 35 பவுன் நகை திருட்டு வழக்கில் ஒருவர் கைது; சிசிடிவி காட்சிகள் மூலம் தங்க நகைகள் மீட்பு
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி வி.எம்.எஸ். நகர் 2-வது தெருவில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 35 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.22 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்ட வழக்கில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பண்ருட்டி வி.எம்.எஸ். நகரைச் சேர்ந்த தாவூத் வெளிநாட்டில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பேரோஸ் பானு, இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த ஜூலை 3-ஆம் தேதி பண்ருட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஜூலை 7-ஆம் தேதி மருத்துவமனையில் குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, இரவு தம்பதியினர் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் வெளிப்புறக் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், உள்ளே சென்று பார்த்தபோது உள்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும், வீட்டில் இருந்த மர பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 35 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.22 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின்பேரில், பண்ருட்டி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ரகுபதி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் சுற்றுவட்டாரங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சென்னை நல்லம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசனை போலீசார் அடையாளம் கண்டு, கடந்த 17-ஆம் தேதி கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், திருட்டில் ஈடுபட்டதை வெங்கடேசன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெங்கடேசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.


