இழப்பீடு கோரி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்
நாகை சிபிசிஎல் ஆலை விரிவாக்கம்: விடுபட்டோருக்கு இழப்பீடு கோரி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் – போலீசாருடன் தள்ளுமுள்ளு, பதற்றம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் (CPCL) ஆலை விரிவாக்கத்திற்காக ரூ.31,500 கோடி மதிப்பீட்டில் 620 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இதற்காக நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் விவசாயக் கூலிகள் என மொத்தம் 2,163 குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இழப்பீட்டுத் தொகை வழங்க முடிவாகி, அதற்கான நிதியை சிபிசிஎல் நிறுவனம் தமிழக அரசிடம் ஒப்படைத்தது.
மாவட்ட நிர்வாகம் மூலம் இதுவரை 1,769 பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், விடுபட்ட மீதமுள்ள 394 பேருக்கு இதுவரை தொகை வழங்கப்படவில்லை.
விடுபட்ட குடும்பங்களுக்கும் உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி உத்தமசோழபுரம், பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் விவசாயிகள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்த நிலையில், அவர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றபோது கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பெண் காவலர்கள் போதிய அளவில் இன்றி, ஆண் போலீசார் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், குழந்தைகளை கீழே தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
தள்ளுமுள்ளு மற்றும் தடியடியில் சில பெண்களுக்கு கையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட விவசாயிகளை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்தை பெண்கள் மற்றும் பொதுமக்கள் தரையில் அமர்ந்து முற்றுகையிட்டனர்.
போலீசார் போராட்டக்காரர்களை குண்டுகட்டாக அப்புறப்படுத்தி வாகனத்தை இயக்க முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துப் பெண்கள் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலையில் போராட்டத்தை கைவிட மறுத்த 500-க்கும் மேற்பட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்து தனியா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இச்சம்பவத்தால் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் நீண்ட நேரம் போர்க்களம் போல காட்சியளித்தது.


