புதுச்சேரி, காரைக்காலில் ‘சாகர் கவாஜ்’ கடலோர பாதுகாப்பு ஒத்திகை தீவிரம்
புதுச்சேரி: கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சாகர் கவாஜ்’ (Sagar Kavach) என்ற இருநாள் கடலோர பாதுகாப்பு ஒத்திகை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று தொடங்கியது. இந்த ஒத்திகை நாளையும் தொடர்ந்து நடைபெறுகிறது.
2008-ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் கடலோர பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ‘சாகர் கவாஜ்’ ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இந்தியக் கடலோரக் காவல் படை, கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து தீவிரவாத எதிர்ப்பு மற்றும் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பு போலீசார் நடுக்கடலுக்கு சென்று மீன்பிடிப் படகுகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது படகுகளின் பதிவெண்கள், மீனவர்களின் அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், கடலில் அல்லது கடற்கரைப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
கடலோர பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் நடைபெற்று வரும் இந்த இருநாள் ஒத்திகையில் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.


