ஒரகடம் அருகே விதிமீறி வைக்கப்பட்ட ராட்சத விளம்பர பேனர்களால் விபத்து அபாயம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வண்டலூர்–வாலாஜாபாத் மாநில நெடுஞ்சாலையோரங்களில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பேனர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை வண்டலூரில் இருந்து வாலாஜாபாத் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், செரப்பணஞ்சேரி, வஞ்சுவாஞ்சேரி மற்றும் வைப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி பல்வேறு ராட்சத விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பேனர்கள் காரணமாக வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பல இடங்களில் பேனர்கள் கிழிந்து மின்கம்பிகளில் சிக்கியபடி தொங்குவதால் மின்சார விநியோகமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பருவமழை தொடங்க உள்ள நிலையில் பலத்த காற்று வீசினால், இந்த ராட்சத பேனர்கள் சரிந்து சாலைகளிலும் அருகிலுள்ள குடியிருப்புகளிலும் விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே, விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் திலகராஜ் கூறுகையில், “சாலையோரங்களில் பத்துக்கும் மேற்பட்ட விளம்பர பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருப்பது உண்மை. இதுபோன்ற பேனர்களால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவுடன் தன்னையே மிரட்டும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இந்த விவகாரம் வருவாய்த்துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் விதிமீறி அமைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சொந்த பட்டா நிலத்தில் கூட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் ராட்சத விளம்பர பேனர்கள் அமைப்பது சட்டப்படி குற்றமாகும்,” என்றார்.
விதிமீறி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்றி, சாலை பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


