5 பவுன் நகையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்கள்
நத்தம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த 5 பவுன் நகையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்கள்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சத்யா(45). அதே ஊரை சேர்ந்தவர் சசிகலா(44). கட்டிட தொழிலாளிகள். இவர்கள் இருவரும் ஞாயிற்றுகிழமை சமுத்திராபட்டிக்கு கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சமுத்திராபட்டி குளக்கரை பகுதியில் சாலையில் கேட்பாரற்று ஒரு பர்ஸ் கிடந்தது. இதை எடுத்த இருவரும் திறந்து பார்த்த போது அதற்குள் 5 1/4 பவுன் தங்க நகைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து நத்தம் காவல் நிலையம் சென்ற இருவரும் நகைகளை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் திண்டுக்கல்- தண்டல்காரன்பட்டியை சேர்ந்த சிவக்குமார்(30)- சினேகா(23) ஆகியோர் சேக்கிபட்டி பகுதிக்கு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது தவற விட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை வரவழைத்த போலீஸார் உரிய ஆவணங்களை சரி பார்த்து அவர்களிடம் நகையை ஒப்படைத்தனர்.
தொடர்ந்துகட்டிட வேலைக்கு சென்று நேர்மை தவறாமல் நகைகளை ஒப்படைத்த சத்யா, சசிகலா ஆகியோரை நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் மாரியப்பன் உள்ளிட்ட போலீஸார்களும், நகையை பெற்று கொண்ட தம்பதியினரும் பாராட்டு தெரிவித்தனர்.


