நூற்றாண்டு பழமையான ஸ்ரீ காளியம்மன், பகவதியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
கொடைரோடு அருகே சி.புதூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், பகவதியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்ச்சையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள சி.புதூர் கிராமத்தில்,நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், பகவதியம்மன் கோவில் அஸ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவில் நேற்று முன்தினம் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பிரமாண்ட யாகசாலையில் வைத்து, கணபதி ஹோமம், கோபூஜை, லட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, அம்மன் உயிரூட்டல் நிகழ்ச்சி உள்ளிட்ட ஆறுகால யாக வேள்விகள் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் நடைபெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்வாக கடாம் புறப்படும் நிகழ்ச்சியை அடுத்து, சீனிவாச நரசிம்ம சர்மா சுவாமிகள் தலைமையில், சுரேஷ் பவுன் சிவாச்சாரிகள் முன்னிலையில் மங்கல இசையுடன் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் எடுத்து வரப்பட்டு இராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது அப்போது கருட பகவான் வானில் வட்டமிட்டதைக் கண்ட பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற விண்ணை முட்டும் கோஷங்களை எழுப்பி அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து பரிவார தெய்வங்களான துர்க்கை அம்மன், விநாயகர், ஊர்காலசாமி, கருப்பணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, சின்னாளபட்டி, செம்பட்டி, சோழவந்தான், நெல்லை, மதுரை, கோவை, பாண்டிச்சேரி, சென்னை தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதான வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


