வேடசந்தூர் தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு
வேடசந்தூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நேர்த்திக்கடனாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாகம்பட்டி கிராமத்தில் உள்ள மகாலட்சுமி, மாமுடி சாமி, சென்னப்பன், மால்லம்மாள் மற்றும் கருப்புசாமி உள்ளிட்ட தெய்வங்களின் கோயில்கள் உள்ளது.
இந்தக் கோயில்களின் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி தொடங்கியது. இதனையொட்டி பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
கோயில்களில் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, ஆற்றுக்கு சென்று கரகம் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் சுவாமிகளை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
குழந்தை வரம், தொழில் வரம், விவசாயம் செழிக்க விரதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட பக்தர்கள் கோவில் முன்பாக அமர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரி ஆணியடித்த காலணி அணிந்து ஆசி வழங்கினார்.
அதன் பின்னர் கோயில் முன்பாக வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் ஒவ்வொரு தேங்காவாக உடைத்தார்.
நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமியை வழிபட்டுச் சென்றனர்.
இந்த வினோத வழிபாட்டில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
