குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் குடியிருப்பு வாசிகள், விவசாயிகள் அதிர்ச்சி
புவனகிரி, சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்றுப்புற கிராமம் பகுதிகளில் பல மணி நேரமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு.
குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் குடியிருப்பு வாசிகள், விவசாயிகள் அதிர்ச்சி.
குறைந்தழுத்த மின்சாரம் காரணமாக மின் மோட்டார், வீட்டு உபயோக பொருட்கள் பாதிப்படையும் எனவும் வேதனை.
கடலூர் மாவட்டம் புவனகிரி, சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மின்வெட்டு ஏற்பட்டால் திரும்ப மின்சாரம் கிடைப்பதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எப்போது வரும், எப்போது செல்லும் என தெரியாத நிலையில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் திடீரென ஏற்படும் குறைந்த அழுத்த மின்சாரத்தின் காரணமாக விவசாயிகள், குடியிருப்பு வாசிகள் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனெனில் குறைந்த அழுத்த மின்சாரம் மின்மோட்டார் மற்றும் வீட்டு உபயோக பொருட்களையும் பாழ்படுத்தி விடும் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
மின்வெட்டு ஏற்படுவது குறித்து அதிகாரிகளிடம் குடியிருப்பு வாசிகளும், விவசாயிகளும் கேட்கும் போது அதிகாரிகள் ஏதேதோ காரணங்களை கூறி வருகின்றனர்.
தற்போது மின்வெட்டு அதிகரித்து வருவதால் இரவு நேரங்களில் உறக்கத்தை தொலைத்து வீதிகளில் நடமாடி வரும் குடியிருப்பு மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் மீண்டும் பழைய நிலைக்கு சென்று விடுமோ என்று தோன்றும் விதத்தில் மண்ணெண்ணெய் விளக்கை எரியவிட்டு எப்போது மின்சாரம் வரும் என காத்திருந்தும் வருகின்றனர்.
எனவே பொதுமக்களின் இன்னலை போக்கிட அரசு தடையில்லாமல் மின்சாரத்தை தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் வேதனையோடு கோரிக்கை வைத்து வருகின்றனர்.


