வீட்டிற்குள் நுழைந்து சரமாரி: லாரி ஓட்டுநர் உயிரிழப்பு
வீட்டில் உறங்கி கொண்டிருந்த லாரி ஓட்டுநரை, பின்புறம் வழியாக வீட்டிற்குள் நுழைந்து வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த மேல திருப்பூந்துருத்தி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்குமரன் (41). லாரி ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மனைவி ரதியா (35) திருவையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த நிலையில் நேற்று மகள், மகன் பள்ளிக்கு சென்றுவிட்டனர். மனைவி ரதியா திருவையாருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இளங்குமரன் மட்டும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கூடம் முடித்து விட்டு பிள்ளைகள் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் கதைவை திறக்காததால் கொல்லைப்புறம் சென்ற போது கதவு திறந்து கிடந்துள்ளது.
அப்போது உள்ளே சென்று பார்த்த போது தந்தை ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த பிள்ளைகள் கதறி அழுந்துள்ளனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்த போது இளங்குமரன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்தனர் நடுக்காவேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தடயவியல் துறை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மோப்ப நாய் சோழா வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்ட போது கொல்லைப்புறம் சிறிது தூரம் சென்று நின்று விட்டது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பின்புறம் வழியாக வந்து அவரை கொலை செய்து விட்டு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


