நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் அழிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, நடுக்காவேரி, மருவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கப்பட்டன.
மருவூர் காவல் நிலையம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய குழி தோண்டப்பட்டது. அதில் அனைத்து போதைப்பொருட்களையும் கொட்டி புதைத்து அழித்தனர்.

இந்த அழிப்பு நடவடிக்கையின் போது காவல்துறை, வருவாய்துறை, உணவுத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


