திருப்புகழை கண்ணாடி எழுத்தில் எழுதி உலக சாதனை படைத்த தரங்கம்பாடி இளைஞருக்கு குவியும் பாராட்டுக்கள்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(32), கண்ணாடியில் பார்த்தால்தான் சரியாகப் படிக்கக்கூடிய(mirror writing)எனப்படும் கண்ணாடி எழுத்து முறையில் எழுதி சாதனை படைத்து கவனம் ஈர்த்துள்ளார்.
கணினி பயன்பாட்டியல் (BCA) இளங்கலை பட்டம் பெற்றுள்ள ராமகிருஷ்ணன் தற்போது கடலோர பாதுகாப்பு குழும ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவது, ஓலைச்சுவடிகள் தயாரிப்பது உள்ளிட்ட கலைகளில் அதிக ஆர்வம் கொண்ட அவர், வித்தியாசமான சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்ற இலக்குடன் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.அதன் ஒரு பகுதியாக ஓலைச்சுவடியில் திருக்குறளை எழுதிப் பழகிக் கொண்டிருந்தபோது, எழுதியதை கண்ணாடியில் பார்த்தபோது எழுத்துக்கள் தலைகீழாகத் தெரிந்ததே அவருக்கு புதிய சிந்தனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு, கண்ணாடியில் பார்த்தால்தான் சரியாகப் படிக்க முடியும் கண்ணாடி எழுத்து என சொல்லப்படக்கூடிய கண்ணாடி எழுத்து(mirror writing)
முறையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கடுமையான பயிற்சியின் மூலம் கற்றுத் தேர்ந்தார்.
அதனை வைத்து ஏதேனும் சாதனை செய்ய வேண்டும் என முடிவு செய்த அவர்
தரங்கம்பாடியில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் திருப்புகழின் முதல் பாடலையும், நடராஜர் குறித்த சிறப்பு பாடலையும் வெறும் 10 நிமிடங்களில் கண்ணாடி எழுத்து (mirror writing)முறையில் எழுதி தனது திறமையை வெளிப்படுத்தினார். அதனை “ASPIRE Book of World Records சார்பில் உலக சாதனையாக பதிவு செய்து, அவருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தது.
இந்த சாதனைக்கு நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராமகிருஷ்ணன் கூறுகையில், அடுத்த கட்டமாக திருக்குறளின் 133 அதிகாரங்களையும் 1,330 குறள்களையும் ஓலைச்சுவடியில் முழுமையாக கண்ணாடி எழுத்து முறையில் எழுதி மேலும் ஒரு உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ச்சியான முயற்சியும், விடாமுயற்சியும் இருந்தால் சாதனை படைக்க முடியும் என்பதை தனது தனித்துவமான திறரமையின் மூலம் நிரூபித்துள்ள
ராமகிருஷ்ணன்னுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

