அரசு விழாவா? தவெக கட்சி விழாவா?
அரசு விழாவா? தவெக கட்சி விழாவா? மேடையை ஆக்கிரமித்த கட்சியினர்: வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ். மணியன்;

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட சமுதாயக் கூடத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேதாரண்யம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத் துறை உயர் அலுவலர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிகழ்ச்சி மேடை முழுவதையும் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமார் பதிலாக அவர்களுடைய மகன் ரொனால்டோ மற்றும் தொண்டர்கள் முன்கூட்டியே ஆக்கிரமித்து அமர்ந்திருந்தனர்.

விழாவில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ ஓ.எஸ். மணியன், மேடையில் அரசு நெறிமுறைகள் மீறப்பட்டு ஒரு குறிப்பிட்ட கட்சியினர் மட்டுமே ஆக்கிரமித்திருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்தார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொள்வதாகக் கூறி என்னை அழைத்துவிட்டு, மேடை முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினரை அமர வைத்து விழா நடத்துகிறீர்களா? இது அரசு விழாவா அல்லது தவெக கட்சி விழாவா? நாளை அரசு விழாவில் தேசியக்கொடி ஏற்றுவதற்குப் பதிலாக தவெக கொடியை ஏற்றுவீர்களா?” என்று அதிகாரிகளிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
அவரைச் சமாதானப்படுத்த முயன்ற அரசு அலுவலர்களைக் கடுமையாகக் கடிந்துகொண்ட ஓ.எஸ். மணியன், உடனடியாக நிகழ்ச்சியைப் புறக்கணித்து அங்கிருந்து வெளிநடப்பு செய்தார். அரசு சமுதாய வளைகாப்பு விழாவில் ஏற்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


