in

குறைதீர்க்கும் நாள் கூட்டம்: சம்பா பயிர் காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிக்கை

குறைதீர்க்கும் நாள் கூட்டம்: சம்பா பயிர் காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிக்கை

 

நாகப்பட்டினத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: சம்பா பயிர் காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிக்கை.​

​நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை, திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்தனர்.

​இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக கடைமடை விவசாய சங்க மாநிலத் தலைவர் கமல் ராம் மற்றும் விவசாயிகள் பேசுகையில், சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு வரும் நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளதால் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க மாவட்ட நிர்வாகம் அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், கூட்டுறவு சங்கங்களில் உள்ள பயிர்க்கடன் நிலுவைத் தொகையை இம்மாதத்திற்குள் செலுத்தினால்தான் வட்டி மற்றும் கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற நிபந்தனையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடன் சுமையால் தவிக்கும் விவசாயிகளால் உடனடியாகப் பணம் செலுத்த முடியாத சூழல் உள்ளதால் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான காலக்கெடுவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

​தொடர்ந்து, ‘ஆத்மா’ (ATMA) திட்ட ஆலோசனைக் குழுவில் அதிகாரம் மிக்கவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்ய வேண்டும் எனவும், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகளின் இந்தக் கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைப்பதாக உறுதியளித்துள்ளார்.

What do you think?

திமுக இளைஞரணி செயலாளர் பிறந்தநாளை ஒட்டி நலத்திட்ட உதவி

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை