பறவை காய்ச்சல் எதிரொலி குழி தோண்டி புதைக்கும் பணி
கடலூர் மாவட்டம், நொச்சிக்காடு பகுதியில் பறவை காய்ச்சல் எதிரொலியாக அங்குள்ள கோழிப்பண்ணைகளில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை அப்புறப்படுத்தி குழி தோண்டி புதைக்கும் பணியில் கால்நடை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் பிராய்லர் கோழி பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான கோழிகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தன.
எனவே இது குறித்து கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினர் இறந்த கோழிகளின் மாதிரிகளை சேகரித்து நாமக்கல் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் மத்திய அரசு ஆய்வகமான கோபாலில் இருந்து பறவை காய்ச்சல் கடலூர் மாவட்டத்தில உறுதியாகி உள்ளது என்ற அறிவிப்பை தொடர்ந்து குள்ளஞ்சாவடி அருகே உள்ள கட்டியங்குப்பம் பகுதிகளில் உள்ள கறிக்கோழி பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அங்கிருந்த கோழிகளை கால்நடை துறையினர் அப்புறப்படுத்தினர்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள நொச்சிக்காடு கிராமத்தில் 5,000-க்கும் மேற்பட்ட கறிக்கோழிகளை அழிக்கும் பணியில் கால்நடை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நொச்சிக்காடு கிராமத்தில் செயல்பட்டு வரும் கறிக்கோழி வளர்ப்புப் பண்ணையில் கால்நடைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 5,000-க்கும் மேற்பட்ட கோழிகளைப் புதைத்து அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையினர் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நோய் பரவலைத் தடுக்கும் வகையில் நொச்சிக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி உள்ளிட்ட மருந்துகளைத் தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


