ரீல்ஸ் வைரல் வீடியோ தந்த விபரீதம்
ரீல்ஸ் வைரல் வீடியோ மோகம் தந்த விபரீதம்… உடும்பு வேட்டைக்கு நாய் பயிற்சி அளித்த நபர் கைது செய்து சிறையில் அடைப்பு, வனவிலங்குகளை வதைத்தால், கம்பி எண்ணுவது உறுதி என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை:
நாகப்பட்டினம்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாக வேண்டும் என்ற ஒரே ஆசையில், விபரீத விளையாட்டில் இறங்கி சிக்கியுள்ளார் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன்.
அரசாங்கத்தால் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட வனவிலங்கான உடும்பைப் பிடித்து, அதனைத் தன் வளர்ப்பு நாய்களுக்கு இரையாக்கி வேட்டைப் பயிற்சி அளித்துள்ளார்.
இந்த வெறிச்செயலை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் அப்லோட் செய்ய, அதுவே அவரது உலைவைத் தேடித்தந்துள்ளது.

வீடியோ வைரலாகப் பரவியதும் இதை அறிந்த வனத்துறையினர், ரகசியத் தகவலின் அடிப்படையில் அதிரடி காட்டி அவரை கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்ட வனஉயிரின காப்பாளர் ரமேஸ்வரன் IFS உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் சியாம்சுந்தர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் முத்துகிருஷ்ணனைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகப்பட்டினம் சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களின் “சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளுகிறோம் பேர்வழி என்று வனவிலங்குகளை வதைத்தால், கம்பி எண்ணுவது உறுதி” என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கறாரான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேடிக்கைக்காகச் செய்த ஒரு காரியம், இன்று அந்த நபரை சிறைக்குள்ளே தள்ளியுள்ளது.


