in

சிதம்பரம் அருகே பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை

சிதம்பரம் அருகே பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை

சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. தற்கொலைக்கு காரணம் எனக்கூறி 4 பேர் மீது போலீசில் தந்தை புகார். கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பை அடுத்த நார்த்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் எழிலரசன். இவரது மகள் மதுபாலா(20). இவர் இளங்கலை பட்டதாரி.

இவர் ஆனந்த் என்ற இளைஞரை காதலித்து வருகிறார். அவர்களுக்கு மதுபாலாவின் பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி மதுபாலாவின் பெற்றோர் ஊருக்கு சென்றிருந்தனர் அப்போது மதுபாலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மதுபாலாவின் காதலரான ஆனந்த் என்பவரிடம், எழிலரசன் மருந்து வாங்கி வீட்டில் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதன்பேரில் ஆனந்த் மருந்து வாங்கிச் சென்று கொடுத்ததாகவும் கூறப்படுகிறது

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, உதயகுமார், வினித், தேசிகன் ஆகிய 4 பேரும் மதுபாலாவின் வீட்டிலிருந்து வந்த ஆனந்திடம் தகராறு செய்ததாகவும், பின்னர் மதுபாலாவின் வீட்டிற்கு சென்று அவரை ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவமானமடைந்த மதுபாலா கடந்த 16ஆம் தேதி அங்கிருந்த ஒரு மாட்டு கொட்டகையில் தூக்கில் தொங்கி உள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக மதுபாலாவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை அளித்தும் அது பலனின்றி மதுபாலா இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் மதுபாலா இறந்ததற்கு அவர்கள் 4 பேர் தான் காரணம் என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஒரத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

100 நாள் வேலை வழங்கக் கோரி முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு 

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் இருந்து போராட்டம் நடத்த மீனவர்கள் புறப்பட்டனர்