100 நாள் வேலை வழங்கக் கோரி முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஈடுபட்ட பெண்கள், கடந்த சில நாட்களாக வேலை கோரி விண்ணப்பித்தும் பணிகள் வழங்கப்படவில்லை என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், உடனடியாக 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணிகளை ஒதுக்கி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவலறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தகுதியான பயனாளிகளுக்கு விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


