in

மீன்பிடி வலையில் சிக்கிய 100 கிலோ அரிய வகை கடல் ஆமை

மீன்பிடி வலையில் சிக்கிய 100 கிலோ அரிய வகை கடல் ஆமை

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, மீன்பிடி வலையில் சிக்கிய 100 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமையை, மீனவர்கள் தங்களின் வலையை அறுத்து பத்திரமாக மீட்டு மீண்டும் கடலில் விட்ட நெகிழ்ச்சியான சம்வம் பொதுமக்கள் இடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதுக்குடி பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில், அவருடன் கண்ணன், முகேஷ், விக்னேஷ்வரன், குமார் மற்றும் கேசவன் ஆகிய 6 மீனவர்கள் இன்று வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நடுக்கடலில் அவர்கள் விரித்த வலையைச் சுருட்டி இழுத்தபோது, அதில் சுமார் 100 கிலோ எடையுள்ள மிகப்பெரிய அரியவகை கடல் ஆமை ஒன்று சிக்கியிருப்பது தெரியவந்தது.

ஆமையின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதை உணர்ந்த படகின் உரிமையாளர் சரத்குமார், சிறிதும் யோசிக்காமல் உடனடியாக நடுக்கடலிலேயே படகை நிறுத்தினார்.

வலையை அறுத்து உயிரைக் காப்பாற்றிய மீனவர்கள்:
தங்கள் மீன்பிடி வலை சேதமடையும் என்பதையும் பொருட்படுத்தாமல், கடலோர உயிரினப் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, வலையை அறுத்து ஆமையைச் கவனமாக மீட்டனர். தொடர்ந்து, எந்தவித காயமும் இன்றி அந்த அரிய வகை ஆமையை மீண்டும் பத்திரமாக கடலுக்குள் நீந்திச் செல்ல விட்டனர்.

மீனவர்கள் இந்த அரிய வகை ஆமையை மீட்டு கடலில் விடும் காட்சிகளைத் தங்கள் கைப்பேசியில் பதிவு செய்திருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. கடல் வளத்தையும், கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்க முன்வந்த தொண்டி புதுக்குடி மீனவர்களின் இந்தச் செயலை அரசு அதிகாரிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் ஆடி ஞாயிறு சிறப்பு தரிசனம்

திருவாடானை அருகே வயல்வெளியில் 500 யூனிட் மணல் குவிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்